சென்னை:
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள், 14,141 ஏரிகள், 20 ஆயிரம் கி.மீ. நீளத்துக்கு கால்வாய்கள் உள்ளன. மேலும், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏரிகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ளன.
மாநிலத்தின் ஆண்டு மழையளவு சராசரியாக 965.60 மி.மீ. ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யக்கூடிய தென்மேற்குப் பருவமழை மூலம் 30 முதல் 35 சதவீத நீரும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யக்கூடிய வடகிழக்குப் பருவமழை மூலம் 50 சதவீத மழையும் கிடைத்து வருகிறது. நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட 20 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இயல்பாக 328.4 மி.மீ. மழைப்பொழிவு இருக்கும் நிலையில், நடப்பாண்டு 261 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. குறிப்பாக, செப்டம்பர் கடைசி வாரத்தில் மட்டும் இயல்பாக 32.6 மி.மீ. மழை பதிவாகி வந்த நிலையில், இந்த ஆண்டு 78 சதவீதம் குறைவாக, 7 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும், தற்போது கோடைகாலம் முடிந்த பின்பும் கொளுத்தும் வெயிலாலும், எல் நினோ பாதிப்பாலும், வறட்சியின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. பாசனம், குடிநீர் தேவை மட்டுமின்றி, மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், சிக்கல் எழுந்துள்ளது. விலங்குகள், பறவைகளின் நீர் தேவையும் அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 90 அணைகளில் 224.34 டிஎம்சி வரை நீரைத் தேக்கிவைக்க முடியும். ஆனால், பருவமழை பொய்த்துள்ளதால் தற்போது 76.4 டிஎம்சி நீர் (34 சதவீதம்) மட்டுமே இருப்பில் உள்ளது. 60-க்கும் மேற்பட்ட அணைகளில் நீர் இருப்பு 25 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதால், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்படாததால், டெல்டா பகுதிகளில் பாசனம் மட்டுமின்றி, குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், பல மாவட்டங்களின் குடிநீர்ப் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும்.
எல் நினோ தாக்கத்தால் இந்தாண்டு பருவமழை தாமதமாக தொடங்கியதுடன், மிகக் குறைவான அளவே பெய்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை வரும் 15 முதல் 21-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நம்பிக்கையளிக்கிறது. பருவமழை கை கொடுத்தால், அணைகளின் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கைகொடுக்குமா கர்நாடகா?
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்து வருகிறது. 124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 103.88 அடியும், 65 அடி உயரமுள்ள கபினியில் 49.75 அடியும், 129 அடி உயரமுள்ள ஹேரங்கியில் 122 அடியும், 117 அடி உயரம் கொண்ட ஹேமாவதி அணையில், 87.15 அடியும் நீர் இருப்பு உள்ளது. எனவே, தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பாக்ஸ் (இன்போகிராபிக்ஸ்)
தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதிய நீர் இருப்பு மற்றும் தற்போதைய நீர் இருப்பு விவரம்:
அணையின் பெயர் – கடந்த ஆண்டு நீர்மட்டம் (அடியில்) - நீர் இருப்பு (டிஎம்சி)– இந்த ஆண்டு நீர்மட்டம் – நீர் இருப்பு
1. மேட்டூர் – 115.5 – 86.47 – 74.44 – 36.6
2. பவானிசாகர் – 97.91 -27.12 – 53.65 – 5.36
3. அமராவதி - 72.67 – 2.59 -38.39 - .674
4.. முல்லை பெரியாறு – 131 – 4.94 – 115.85 – 2
5. வைகை – 64.4 – 4.49 – 41.96 – 1.1
6. பரம்பிக்குளம் – 71.57 – 13.35 – 56.16 – 9.96
7. ஆழியாறு – 118.95 – 3.79 – 53.6 - .399
8. சாத்தனூர் – 114.5 – 6.24 – 87.55 – 2.19